”பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைக்கு இந்திய அரசின் மௌனம் வெட்கக்கேடானது”- பிரியங்கா காந்தி கண்டனம்!
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 251 பேர் ஹமாஸால், பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உணவு கிடைக்காமலும், ஊட்டச் சத்து குறைபாட்டாலும் காசாவில் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ”இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது பேரழிவைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”இஸ்ரேலிய அரசு இனப்படுகொலை செய்து வருகிறது. அது 60,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. அவர்களில் 18,430 பேர் குழந்தைகள். அத்துடன் நூற்றுக்கணக்கானவர்களை பட்டினியால் கொன்றுள்ளது, மேலும் மில்லியன் கணக்கானவர்களை பட்டினியால் வாட அச்சுறுத்துகிறது. மௌனம் மற்றும் செயலற்ற தன்மையால் இந்தக் குற்றங்களைச் செயல்படுத்துவதும் ஒரு குற்றமாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள் மீது இந்த அழிவைக் கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் மற்றொரு பதிவில்,
”பாலஸ்தீன மண்ணில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டது மற்றொரு கொடூரமான குற்றமாகும். உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் தைரியம் இஸ்ரேலிய அரசின் வன்முறை மற்றும் வெறுப்பால் ஒருபோதும் உடைக்கப்படாது. இந்த துணிச்சலான ஆன்மாக்கள் உண்மையான பத்திரிகை என்றால் என்ன என்பதை நமக்கு நினைவூட்டியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.