"அதிமுக ஆட்சியில் காவல்துறை கைகள் அவிழ்க்கப்படும்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில், ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப் பயணம் மேற்கொண்டார். திருவையாறு தொகுதிக்குட்பட்ட தேரடி அருகே தெற்கு வீதியில் மக்களை சந்தித்த பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’காவிரிக் கரையோரம் இருக்கும் திருவையாறு எனக்குப் பிடித்த தொகுதி. அத்தனை மக்களும் ஒன்றாகக் குழுமியிருக்கிறீர்கள். உங்கள் ஆரவாரம் அதிமுக வெற்றி பெற்றுவிட்டது போலவே உள்ளது.
திமுக வெல்லும் என்று ஸ்டாலின் நினைக்கிறார், இந்தக் கூட்டத்தைப் பார்த்தாலே அவருக்குத் தூக்கம் வராது. 9.15 மணியாகிட்டது கால்கடுக்க நின்றுகொண்டு இருக்கிறீர்கள். எனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அதிமுக கட்சி இருப்பதால்தான் மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்கிறோம். திமுக அரசு 50 மாத ஆட்சியில் ஏதாவது விவசாயிகளுக்குச் செய்தார்களா? ஆனால் நமது அதிமுக ஆட்சியில் பயிர்க்காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக இழப்பீடு கொடுத்தோம். குறுவை சாகுபடி விவசாயிகளை திமுக அரசு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவில்லை. விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடு மாடு கோழி, முதியோர் உதவித்தொகை கொடுத்தோம்.
குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினுக்கு 2026 தேர்தல் ஒரு முடிவு கட்டும். விவசாயிகள் பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம், மும்முனை மின்சாரம் கொடுத்தோம், குறுவை தொகுப்பு சம்பா தொகுப்பு கொடுத்தோம். விவசாயிகளின் அரசு அதிமுக அரசு. ஸ்டாலினுக்கு வீட்டு மக்கள் தான் முக்கியம். அதிமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் போராடும். விலைவாசி உயர்வினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொரோனா, புயல், வறட்சி ஏற்பட்டபோதும் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. தை பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்தோம். மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். திமுகவினர் பொங்கல் தொகுப்பு என்று ஒழுகுற வெல்லம் கொடுத்தார்கள்.
சகோதரிகள், தாய்மார்கள் மகிழ்ச்சியோடு இருப்பதற்காக அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் நல்ல புடவை தீபாவளிக்கு வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் வரி உயர்வு இல்லை, இன்று வரி, மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. 2021 திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டண கணக்கீடு மாதம் ஒருமுறை என்று சொன்னார்கள், செய்தார்களா? கேஸ் மானியம் கொடுக்கவில்லை, கல்விக் கடன் ரத்துசெய்யவில்லை. 2 கிலோ சர்க்கரை கொடுக்கவில்லை. நீர் மேலாண்மைக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவந்தோம். அதை கைவிட்டுடாங்க. சரியாகத் தூர் வாராததால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேரவில்லை. திருவையாறு மக்கள் சுத்தமான குடிநீர் குடிக்க வேண்டும் என்பதற்காக நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொண்டுவந்தேன், இந்த ஆண்டு திட்டம் நிறைவேறும்.
11500 கோடி ரூபாய் திட்டம். இப்படி ஒரு திட்டமாவது திமுக செய்ததா? மாணவர்கள் மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்தோம். பள்ளி, உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தோம். ஒரு செடி வைத்தால் 3 முதல் 4 ஆண்டுகள் கழித்து பழம் வரும். அந்த கனி வரும்போது சிலர் பறிக்க முயல்கிறார்கள். அது நியாயமா? அதுபோல அதிமுக அரசு மாணவர்களுக்குக் கல்வித் திட்டங்கள் கொடுத்தோம். அதை சிலர் பறிக்கப் பார்க்கிறார்கள். மாணவர்களே உஷாரா இருங்கள். ஓரணியில் தமிழ்நாடு என்று கல்லூரிக்குப் போகிறார்கள், இந்த அரசு ஓடிபி அரசாகிவிட்டது. மாணவர்கள் எச்சரிக்கையா இருக்க வேண்டிய நேரம் இது. ஏனென்றால் மாணவர்களுக்கு நன்மைகள் எல்லாம் நாங்கள் செய்தோம்.
உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டுமுறை நடத்தினோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு கொடுத்தோம். கல்லூரிகளை ஏராளமாக கொடுத்தோம். குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். இளம் சிங்கக் குட்டிகளே, எந்த ஆட்சி சிறந்தது என்று சிந்தித்துப் பார்த்து அடுத்தாண்டு தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தாருங்கள். கஞ்சா விற்காத இடமே இல்லை. திமுக அரசு அதை கண்டுகொள்ளவில்லை, கவலைப்படவில்லை, பலர் கஞ்சாவுக்கு அடிமையாகி பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை நடக்குது, சிறுமி முதல் பாட்டி வரை சுதந்திரமாக வாழ முடியவில்லை. போலீஸார் கைகள் கட்டப்பட்டுள்ளது.
முழுமையாக செயல்படமுடியவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். காவல்துறை கைகள் அவிழ்க்கப்படும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட வைப்போம். கும்மிடிப்பூண்டியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த கொடுமையைத் தடுக்க முடியாத பொம்மை முதல்வர் ஆட்சி செய்கிறார். அதிமுக சட்டத்தின் ஆட்சியை நடத்தியது. இன்று சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. உங்களுடன் ஸ்டாலின் என்று வருகிறார். 46 திட்டங்களை வீடுவீடாக வந்து கேட்கிறார்கள். குறைகளை 45 நாளில் சரிசெய்வார்களாம். இந்த நான்காண்டுகள் கழித்துத் தான் மக்களுக்கு குறை இருப்பது தெரிகிறது. அடுத்த வருடம் தேர்தல் வருவதால் நாடகம் அரங்கேற்றுகிறார்கள்.
மக்களே உஷாரா இருங்க, திமுக எப்போதுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய சரித்திரம் கிடையாது. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தவில்லை, 50 நாளா குறைந்துவிட்டது. திறமையற்ற அரசு தேவையா என்று சிந்தியுங்கள். ஸ்டாலின் 200 இடம் வெல்வோம் என்று கனவு காண்கிறார். நிஜத்தில் அதிமுக தான் 210 இடம் வெல்லும். அதற்கு சாட்சியே திருவையாறு மக்கள் எழுச்சி. ஸ்டாலின் அவர்களே நீங்க என்ன சாதனை செய்ததாகச் சொல்லி மக்களிடம் செல்வீர்கள். நாங்கள் நிறைய செய்திருக்கிறோம், அதனால் சொல்கிறோம். திமுக என்பது குடும்ப கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பொறுப்பில் இருக்க முடியும் வேறு யாரும் வர முடியாது. இதற்கு தேர்தல் முடிவுகட்டும்.
அதிமுக ஆட்சியில் திருவையாறில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றினோம். 2011-21 வரை நிறைய திட்டங்கள் கொடுத்தோம். பொறியியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், பாலங்கள், தடுப்பணைகள், கல்லணையில் நினைவு மண்டபம், தானியச் சேமிப்புக் கிடங்கு, தாலுகா அலுவலகம், இருவழிச்சாலை, தீயணைப்பு நிலையம், ஆய்வு மாளிகை எல்லாமே அதிமுக ஆட்சியில் செய்தோம். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்..? எதுவுமே செய்யாமல் போட்டோ ஷூட் நடத்துகிறார். 50 மாத ஆட்சியில் எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை. 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.