Money Heist பார்த்து வங்கியில் கொள்ளை - தட்டி தூக்கிய போலீசார்!
கர்நாடகாவின் தாவணகெரே நியாமதி டவுன் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை வளைத்து வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் கர்நாடகாவையே அதிர வைத்தது. இது தொடர்பாக நியாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், கடந்த 6 மாதங்களாக இதுகுறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தொடர் விசாரணையில், தமிழ்நாட்டில் உள்ள மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்புள்ளது தெரியவந்தது. அந்த தகவலின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜய்குமார் (30), விஜய்குமார் (28), நியாமதி அபிஷேக் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஹொன்னாலி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் உள்ளிட்ட 6 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி சகோதரர்கள்தான், நியாமதியில் பேக்கரி நடத்திக் கொண்டே வங்கி கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுத் தந்தனர். தாவணகெரே வங்கியில் விஜய்குமார், 2 முறை வங்கி கடன் கேட்டிருந்தாராம். ஆனால் வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்ததால் தம்பி மற்றும் உள்ளூர் நபர்களை சேர்த்துக் கொண்டு வங்கியையே விஜய்குமார் கொள்ளையடித்துள்ளார்.
இவர்களிடம் இருந்து வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கிணறு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த இந்த நகைகள் அனைத்தையும் நியாமதி போலீசார் மீட்டுள்ளனர். Money Heist போன்ற சீரிஸ் மற்றும் யூடியூப் பார்த்து வங்கியில் கொள்ளையடிக்க பயிற்சி எடுத்துக்கொண்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.