For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம்; தமிழகம் முழுவதும் பாஜக தோற்கும் - தடா பெரியசாமி பேட்டி!

12:45 PM Mar 30, 2024 IST | Web Editor
அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம்  தமிழகம் முழுவதும் பாஜக தோற்கும்   தடா பெரியசாமி பேட்டி
Advertisement

அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம் எனவும் தமிழகம் முழுவதுமே பாஜக தோற்கும் எனவும் அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தெரிவித்துள்ளார். 

Advertisement

தமிழக பாஜக பட்டியலின அணியின் மாநிலத் தலைவர் தடா பெரியசாமி,  மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக கார்த்தியாயினி என்ற பெண் வேட்பாளர் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் இருந்த தடா பெரியசாமி இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.  அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தடா பெரியசாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய தடா பெரியசாமி கூறியதாவது: 

பாஜகவின் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த நான் தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளேன்.  விரைவில் என் ஆதரவாளர்களும் இணைய இருக்கிறார்கள்.  சிதம்பரம் உள்ளிட்ட 7 தனித் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யவும் முடிவு எடுத்துள்ளேன்.  2026 தேர்தலிலும் எடப்பாடியோடு சேர்ந்து பணியாற்ற முடிவு எடுத்துள்ளேன்.  சிதம்பரம் என் சொந்த தொகுதி ஆனால் என்னை கேட்காமல் வேலூரில் இருந்து ஒரு பெண்ணை அழைத்து வந்து அங்கே வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்.

பட்டியல் அணி மாநில தலைவராக இருக்கும் எனக்கே மரியாதை இல்லை என்றால் அந்த சமுதாயத்திற்கு எப்படி மரியாதை இருக்கும்.  அண்ணாமலை,  எல்.முருகன்,  கேசவ விநாயகம் இவர்கள் மூன்று பேரின் திட்டம் தான் இது.  இவர்கள் மூன்று பேர் தான் கட்சியா? சிண்டிகேட்டை உருவாக்கி ஆளுக்கு ஒரு தொகுதி என பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து களமாடிக் கொண்டிருக்கிறேன். அப்பேர்ப்பட்ட தொகுதியில் திடீரென்று அந்த பெண்ணை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள்.  திருமாவளவன் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையிடமும், எல்.முருகனிடமும்,  கேசவ விநாயகமிடமும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.

திருமாவளவனின் சதி திட்டத்திற்கு பாஜகவை அடமானம் வைத்து விட்டார்கள்.  2004 முதல் பாஜகவில் இருக்கிறேன். இந்த தொகுதிக்கு இவ்வளவு உழைத்து உள்ளேன்.  திருமாவளவன் எதிர்த்து பேசியதில் எனது வீடு அடித்து நொறுக்கப்பட்டது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கேயோ இருக்கும் பெண்ணை கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.  சமூக நீதி என்று சொல்கிறார்கள்.  அந்த பெண்ணிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஏதாவது பொது தொகுதியில் கொடுக்க வேண்டியது தானே.  வேலூர் தொகுதியில் கொடுக்கலாமே?

இந்த செய்தி வந்த உடனேயே நான் அண்ணாமலைக்கு "தவறான முடிவு" என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.  கட்சி எடுத்த முடிவு என்று சொன்னார்.  திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.  தடா பெரியசாமி போட்டியிட்டால் நான் தோற்று விடுவேன் என்று திருமாவளவன் புலம்பும் செய்திகளும் எனக்கு வந்தது. மறைமுகமாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.  திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டு விட்டது.  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற முடியாது. தற்பொழுது நான் அதிமுகவில் இணைந்ததால் சந்திரகாசனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பேன்.

பாஜகவில் அண்ணாமலையின் செயல்பாடு ரொம்ப மோசம்.  அண்ணாமலை கட்சியில் யாரிடமும் கருத்து கேட்பதில்லை.  அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார்.  நிறைய பேரை சம்பந்தமில்லாத ஊரில் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்.  இது அண்ணாமலையின் தவறான முடிவு.  என் எதிர்காலத்தை தாண்டி எனக்கு என் மரியாதை முக்கியம்.  பாஜகவில் எனக்கு மரியாதை இல்லை.  எடப்பாடி எங்களுக்கு தகுந்த மரியாதை கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

எல்.முருகன் முதலில் எஸ்சி எஸ்டி கமிஷனின் தலைவராக இருந்தார்,  பின்பு மாநில தலைவராக இருந்தார்.  பின்பு தாராபுரத்தில் எம்எல்ஏவாக போட்டியிட்டார்.  தொடர்ந்து அவருக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கப்பட்டு தற்பொழுது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.  இது போதாது என்று தற்பொழுது நீலகிரியிலும் போட்டியிடுகிறார்.  அவர் மட்டும்தான் கட்சியா? கட்சியில் வேற யாரும் தலித்துகள் இல்லையா? இது வித்தியாசமான அணுகுமுறை.

அண்ணாமலை,  எல்.முருகன்,  கேசவிநாயகம் இவர்கள் மட்டும்தான் கட்சி என்று கட்சியை குட்டி சவராக்கி வருகிறார்கள்.  கட்சியை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக பெரிய வளர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை,  எல்லாம் பிம்பம் தான். கோவை தொகுதியில் அண்ணாமலை தோற்பார்,  அதில் எந்த சந்தேகமும் இல்லை. அங்கு மட்டும் இல்லை தமிழகம் முழுவதுமே பாஜக தோற்கும்.

இவ்வாறு தடா பெரியசாமி கூறினார்.

Tags :
Advertisement