சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. ஜம்மு - காஷ்மீரில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு.. - களத்தில் நியூஸ்7 தமிழ்!
2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், ஜம்மு - காஷ்மீரில் இருந்து முதன் முறையாக தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ்.
18-ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
2ம் கட்டமாக வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதிகள், கர்நாடகாவில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 13 தொகுதிகள், உத்தரப்பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 8 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள்,சத்தீஸ்கரில் 3 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், மணிப்பூர், திரிபுரா மற்றும் ஜம்மு, காஷ்மீரின் தலா ஒருதொகுதிக்கு வரும் நாளை மறுநாள் (ஏப். 26) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த லடாக், தற்போது சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால், ஜம்மு - காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்சிகள், மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததாகவும், ஆனால், உரிய பாதுகாப்பு வழங்க முடியாது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தாகவும் கூறினார்.