"பாஜகவின் முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது" - அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுக்கோட்டை பிறகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நோய்க்கான மாத்திரைகளை ஆட்சியர் அருணா தலைமையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசினார். அப்போது, "எம்ஜிஆர் பார்ப்பனருக்கு எதிராக செயல்படவில்லை, கருணாநிதியும் செயல்படவில்லை, இரண்டு பேரும் இரட்டை குழல் துப்பாக்கி போல நண்பர்களாக செயல்பட்டு வந்தனர். எம்ஜிஆர் திமுகவிற்கு எதிராகவும் செயல்படவில்லை.
சில கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் குளறுபடி தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை தற்போது சென்றுள்ளது. நீதிமன்றம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் தெம்பு திமுகவில் உள்ளது நாங்கள் போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதன் காரணமாகவே அவருக்கு கட்சியில் சேர்ந்தவுடன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் போலி வாக்காளர்கள் யார், யார் சேர்ந்துள்ளார் என்பது குறித்து திமுக சார்பில் எடுத்துக் கூறி ஒரு போலி வாக்காளர்கள் கூட இல்லாத அளவிற்கு தமிழகத்தில் நடைமுறைப் படுத்தப்படும்.
பாஜகவின் முக்கியமான முதல் கூட்டணியாக தேர்தல் ஆணையம் உள்ளது. அதன் பிறகு தான் அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்தால் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து முறையீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் கஞ்சா வளர்க்கப்படவில்லை சாராயம் உற்பத்தி செய்யப்படவில்லை இவை எல்லாம் வெளி மாநிலங்களில் உள்ளது. அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்திலிருந்து இங்கு வருவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.
மத்திய அரசை குற்றம் சாட்டுவதற்கு அன்புமணி ராமதாஸ், மற்றவர்களுக்கு பயம். ஏனென்றால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து விடுவோம் என்ற பயத்தில் கூற மறுக்கின்றனர். உயர்நீதிமன்றத்தில் மணல் விற்பனைக்கு ஒரு சில அனுமதிகள் வாங்க வேண்டி உள்ளது. அது கிடைத்தவுடன் தமிழகத்தில் தங்கு தடையின்றி மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் வலுவான கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது. மற்ற கட்சிகள் மற்றொரு வலுவான கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு இல்லை. தங்களுடன் இருப்பவர்கள் தங்களை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மட்டுமல்லாது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்த ஆணை, அறிக்கைகள் குறித்து யார் யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது, அறிக்கைகள் மூடி மறைக்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.