"தூய்மைப் பணியாளர்களைத் துன்புறுத்தும் திமுக அரசுக்கு அழிவு நெருங்கிவிட்டது" - நயினார் நாகேந்திரன்!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 13 நாட்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ள திமுக அரசின் அடக்குமுறை துளியும் மனிதாபிமானமற்றச் செயல்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகள் போல அடித்துத் துன்புறுத்தி வெளியேற்றியுள்ள திமுக அரசையும் அதன் காவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான காவல்துறையினரைப் போராட்டக் களத்தில் குவித்த திமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தையும் வன்மத்தையும் ஒருசேர கட்டவிழ்த்து விட்டுள்ளது. வெறும் வீடியோ ஷூட்டுக்காக தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தியதையும், உணவு உட்கொண்டதையும் ஏதோ இமாலய சாதனை போல பெருமை கொள்ளும் திமுகவினருக்கு அம்மக்கள் மீது மதிப்போ, மரியாதையோ கொஞ்சம் கூட இல்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
இரவு, பகல் பாராது போராடிய மக்களைச் சென்று சந்திக்க மனமில்லாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரைப்படக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்கு மட்டும் நேரமிருக்கிறது. ஒருவேளை மனசாட்சியின் அடிப்படையில் முதல்வர் அம்மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும்.
தூய்மைப் பணியாளர்களும் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். அதை விட்டுவிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.