Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"சக்கர வியூகம் போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது" - ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் கடும் அமளி!

03:18 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் தாமரை வடிவத்தில் சக்கர வியூகம் அமைந்துள்ளதாகவும், இந்த சக்கர வியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுவதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி, ஜூலை 23-ம் தேதி 2024 - 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

“மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தை அமைத்து கட்டுப்படுத்தினர். தற்போதும் நரேந்திர மோடி,  அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என 6 பேரின் சக்கரவியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது (அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு அம்பானி, அதானி, அஜித் தோவல் ஆகியோர் பெயர் அவைக் குறிப்பில் இடம்பெறாது. இதர 3 பேரின் பெயர் மட்டும் இடம் பெறும் என்றார். இதனால் அம்பானி, அதானி பெயரை A1, A2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்).

இந்தியாவில் தாமரை வடிவத்தில் சக்கரவியூகம் அமைந்துள்ளது. இந்த சக்கர வியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கரவியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம்.  நாட்டின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

மத்திய பட்ஜெட்டானது பெருமுதலாளிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது. ஜிஎஸ்டி என்ற வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டன. ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது.

20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தியுள்ளது. நாட்டின் விவசாயிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறது மத்திய அரசு. அவர்களின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டமாக்க தவறிவிட்டது மத்திய பாஜக அரசு. இந்தியா கூட்டணி ஆட்சியில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவருவோம்.

இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? புதிதாக கொண்டுவரப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன்டர்ன் ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றது தான். மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை. நடுத்தர மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு. அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நீட் தேர்வு தொடர்பாக ஒருவார்த்தை கூட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவும் இல்லை” இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ராகுல் காந்தி பேசும் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அதானி, அம்பானி பெயரை குறிப்பிடவும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாஜக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தி பேச்சின் போது குறுக்கிட்டார். இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது குறுக்கிடும் சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது குறுக்கிடுவதில்லை என காங்கிரஸ் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

Tags :
CongressINCloksabhaLoPNews7Tamilnews7TamilUpdatesparliamentRahul gandhi
Advertisement
Next Article