For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” - பிரதமர் மோடி

04:35 PM Feb 08, 2024 IST | Web Editor
“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு ”   பிரதமர் மோடி
Advertisement

மத்திய அரசின் 10 ஆண்டு கால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில்,  எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Advertisement

பாஜக தலைமையிலான மத்திய அரசின் வெள்ளை அறிக்கைக்கு எதிராக பிரதமர் மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று காலை கருப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மோடி அரசு பொருளாதாரத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி கருப்பு அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:

இன்று நாங்கள் அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை கொண்டு வந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது எல்லாம் தனது அரசின் தோல்விகளை மறைக்கிறார். அதே நேரத்தில் நாங்கள் அரசின் தோல்வி குறித்து பேசும் போதெல்லாம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  அதனால் கருப்பு அறிக்கை வெளியிட்டு மோடி அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக்கூறுகிறோம்.

நாட்டின் மிக முக்கியமான பிரச்னை வேலையில்லா திண்டாட்டம்.  ஆனால் மோடி அரசு அது பற்றி பேசுவதே இல்லை.  அவர்கள் 10 ஆண்டுகளை ஒப்பீடு செய்கிறார்கள்.  ஆனால் பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாதனைகளை பற்றி பேசுவதே இல்லை.  பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியைக்கூட வழங்கவில்லை.  பின்னர் அவர்கள் நிதி வழங்கினோம் ஆனால் செலவு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்” என்று தெரிவித்தார்.

முன்னதாக,  பிப். 1-ம் தேதி,  2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியையும்,  பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சியையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சி கருப்பு அறிக்கையை வெளிட்ட சிறிது நேரத்தில் மாநிலங்களவைக்குச் சென்ற பிரதமர் மோடி,  அங்கு ஒய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கார்கே ஜி இங்கே இருக்கிறார்.  ஒரு குழந்தை சிறப்பாக ஏதாவது செய்யும் போதும்,  சிறப்பு விழாக்களுக்கு குழந்தை புத்தாடை உடுத்தி தயாராகும் போதும், தீய விஷயங்கள் மற்றும் கண் திருஷ்டிகளில் இருந்து குழந்தையை பாதுகாக்க பெரியவர்கள் அதற்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.  கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் புதிய பாதையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தீமையின் கண்களில் இருந்து நாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நமக்கு திருஷ்டி பொட்டு வைக்கும் முயற்சி ஒன்று நடந்துள்ளது.  அதற்காக கார்கேவுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடி கேலியாக கூறினார்.

மேலும் மோடி தனது பேச்சில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி பேசினார். அவர் கூறுகையில்,  "நாட்டையும் நாடாளுமன்றத்தையும் வழிநடத்திச் சென்றதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு மகத்தானது.  மிகுந்த உறுதியுடன் நீண்ட காலம் அவர் தனது கடமையை நிறைவேற்றி உள்ளார்.  நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த பேச்சு எங்கெல்லாம் எழுகிறதோ அங்கெல்லாம், நினைவுகூறப்படும் உயர்ந்த மனிதர்களில் ஒருவராக அவர் இருப்பார்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags :
Advertisement