"இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி பேட்டி!
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்புகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக மாதிரி நாடாளுமன்றம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கொண்டு மதுரையில் இன்றும் நாளையும் மாநில அளவிலான மாதிரி நாடாளுமன்றம் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், "இந்திய மக்களின் நலனுக்காக பாஜக ஆட்சி நடத்தவில்லை, மோடியின் நண்பர்களுக்காக ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆப்ரேஷன் சிந்துரை நான் தான் நிறுத்தினேன் என 36 முறை டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க மக்களவையில் வலியுறுத்தியும், எந்த ஒரு பதிலும் அளிக்காமல் மோடி அவையை விட்டு வெளியேறினார். ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் 100 கிலோமீட்டர் சென்று தாக்குதல் நடத்தினோம் என சொல்லும் மோடி பாராளுமன்றத்திற்குள் வரவில்லை.
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வை மோடி அரசு அரசியல் திறனோடு எதிர்கொள்ளவில்லை. அமெரிக்காவின் வரி உயர்வால் இந்தியாவில் ஜவுளி, கடல் உணவு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியா எந்த நாட்டுடன் ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா கூறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியா என்ன பொருளை ஏற்றுமதி இறக்குமதி செய்ய வேண்டும் என சொல்வதற்கு அமெரிக்கா யார்? ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் அதனை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் அடையும் பலனுக்காக இந்தியாவில் பல நூறு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என நிதியமைச்சிற்க்கு கடிதம் எழுதி உள்ளேன்
அமெரிக்காவின் புதிய பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அமெரிக்கா வரி உயர்வு குறித்து ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவித்து விட்டது, ஆனால் மோடி அரசு எந்தவொரு முன் முயற்சியும் எடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.