For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11:28 AM Aug 31, 2025 IST | Web Editor
நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்    அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் வரும் இன்று நள்ளிரவு (நாளை) முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விலைவாசி உயர்வு, வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்து வரும் நிலையில் நெடுஞ்சாலைகள் ஆணையம் அதன் பங்குக்கு சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

Advertisement

தேசிய தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 78 சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் 40 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.25 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் நாளை செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் ஊர்திகளைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகளின் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், சுங்கக்கட்டண வசூல், கட்டண உயர்வு ஆகியவற்றில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. சாலை அமைப்பதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? அதில் எடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு? என்பது குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் காலவரையின்றி சுங்கக்கட்டணம் செலுத்த மக்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கட்டாயப்படுத்துவது நியாயமல்ல. தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் 60% மட்டும் தான் அதற்காக செய்யப்பட்ட முதலீட்டை ஈடு செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மீதமுள்ள 40% தொகை பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்கத் தவறும் நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதற்கு தார்மீக ரீதியில் எந்த உரிமையும் கிடையாது.

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன. 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த போது மத்திய அரசுடன் பேச்சு நடத்தி தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும்; 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்படும் என்று தமிழக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், புதிதாக 34 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டிருக்கின்றனவே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறது. ரூ.3000 கட்டினால் ஆண்டுக்கு 200 முறை சுங்கச்சாவடிகள் வழியாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு, அந்தத் திட்டம் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஒருபுறம் சீர்திருத்தங்களை செய்வதாகக் கூறிக் கொண்டு இன்னொருபுறம் அறத்திற்கு ஒவ்வாத வகையில் கட்டணத்தை உயர்த்துவது நியாயமல்ல. நெடுஞ்சாலைகள் விவகாரத்தில் மத்திய அரசு இரு வகைகளில் கடமை தவறி விட்ட நிலையில், சுங்கக் கட்டணத்தை உயர்த்துவதற்கான தார்மீக உரிமையை இழந்து விட்டது. முதலில், 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி தான் இருக்க வேண்டும் என்ற விதியின்படி கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அதை செய்யவில்லை.

அதற்கு மாறாக அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விட்டு செயற்கைக் கோள் உதவியுடன் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த முறை வந்தால் சுங்கக்கட்டணம் கணிசமாக குறையும். ஆனால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும் எனத் தெரியவில்லை. இரண்டாவதாக, நெடுஞ்சாலைகள் அமைக்க செய்யப்பட்ட முதலீடு வட்டியுடன் எடுக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால், அதை மத்திய அரசு பின்பற்றுவதில்லை. முதலீடுகள் எடுக்கப்பட்டாலும் கூட தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனால், அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் சுங்கக்கட்டண வசூல் என்பது நிரந்தரமான ஒன்றாகி விட்டது. இதுவே அநீதி எனும் நிலையில் ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்தி கூடுதல் அநீதியை இழைக்கக் கூடாது.

சுங்கக் கட்டண உயர்வு ஊர்தி வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அவர்களின் துயரங்களைக் குறைக்கும் வகையிலும் நாளை செப்டம்பர் 1 முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement