ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர் ...அனைத்தையும் தாண்டி திமுக சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அப்போது பேசியதாவது,
"ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கருணாநிதி கூறுவார். ஆனால் கருணாநிதி இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் 'சாதனை சாதனை சாதனை' என கூறியிருப்பார். இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும்.
கருணாநிதியின் எண்ணங்களை தான் நான் நிறைவேற்றி வருகிறேன்.
இந்தியாவில் நம்பர் 1 மாநிமாக, தமிழ்நாடு 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வருமைன்கோட்டிற்கு கீழ் உள்ளனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.
கல்வித்துறையில் கடந்த 4 ஆண்டுகளில் இடைநிற்றலே இல்லாத நிலை உள்ளது. உயர் கல்வியின் வளர்ச்சி தமிழ்நாட்டில் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல், தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம்.
இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். நிதி ஆயோக் வெளியிட்ட வளர்ச்சி இலக்க குறியீட்டில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. தற்போது கடந்த ஆட்சியின் இருளை போக்கி தமிழ்நாடு அரசு தலைநிமிர்ந்து நடக்கிறது.
ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் ஆளுநர், நிதி என்று எல்லா தடைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறோம். இவையெல்லாம் தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை". இவ்வாறு அவர் பேசினார்.