“பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம்!” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
பானை சின்னம் இன்று உலக அளவில் பேசப்பட மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வாக்கு சேகரித்து உரையாற்றினார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
நம்முடைய எழுச்சித்தமிழர் அண்ணன் திருமாவளவனுக்கு வெற்றிச்சின்னமான பானை சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். பானை சின்னம் தற்போது உலக அளவில் பேசப்படுகிறது. அதற்கு காரணம் மத்திய அரசே. மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி பானை சின்னத்தை பெற்றதற்காக திருமாவளவனுக்கும், ரவிக்குமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்த விசயத்தில் இருந்தே நீங்க ஒன்னு புரிஞ்சுக்கலாம். மத்திய பாஜக அரசு தேர்தல் ஆணையத்த கையில் வைத்துக்கொண்டு அவங்க கூட கூட்டணி சேர்ந்தால் உடனே சின்னம் ஒதுக்கும். இல்லையேல் அலைக்கழிக்கும்.
இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பொன்னாள். என்னுடைய அண்ணன் சமூகநீதி போராளி, கருணாநிதியின் அன்பு தம்பி திருமாவளவனுக்கு முதல் முறையாக வாக்குக் கேட்பதை மரியாதையாகவும், மறக்க முடியாத நாளாகவும் கருதுகிறேன்.
உங்களுக்கு நான் சிலவற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதாவது நிலக்கரி திட்டத்திற்கு எடுக்கப்பட்ட 87,734 ஏக்கர் நிலம் திருப்பி வழங்கப்பட்டது. ஜெயங்கொண்டம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் வகையில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இடம் ஒதுக்கப்பட்டு ரூபாய் 16 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் வரை நான்கு வழி சாலை அமைக்க 185 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் நகர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஏரிகளை மேம்படுத்த ரூபாய் ஒன்பது கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வாயிலாக கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவங்களுக்கு உரிமை திட்டமா வழங்கப்படுகிறது.
மீண்டும் மோடி வந்தால் சிலிண்டருக்கு 500 ரூபாய் ஏத்திடுவாரு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெளிவா சொல்லி இருக்கிறார். நிச்சயமாக ஒரு கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு நான் கொடுப்ப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு கொடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அடுத்து அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும்.
ஜெயலலிதா அம்மையார் இருந்த வரைக்கும் தமிழ்நாட்டுக்குள்ள நீட் தேர்வு வரல அந்த அம்மா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பாஜ.க வோட தொல்லை தாங்காம நீட் தேர்வுக்கு துணை போனாங்க. மோடி இதுவரை தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. அதனால் அவர் இனி மிஸ்டர் 29 பைசா என அழைக்கப்படுவார். குடும்ப அரசியல் என கூறுபவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் கருணாநிதி குடும்பம் தான். வருகின்ற தேர்தலில் நீங்கள் போட போகும் ஓட்டுதான் மோடிக்கு வைக்க போற வேட்டு.
பாசத்தோடு கேட்கிறேன், உரிமையோடு கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து கேட்கிறேன், இன்னும் பெருமையா சொல்லனும்னா தலைவருடைய மகனாக இருந்து கேட்கிறேன், கருணாநிதியுடைய பேரனாக இருந்து கேட்கிறேன் 19-ம் தேதி திருமாவளவன் அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து 4 லட்சம் . வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.