“நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் அமமுக இருக்கும்!” - டிடிவி தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் அமமுக இருக்கும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் திமுக ஆட்சியை கண்டித்து அமமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
18 ஆம் நூற்றாண்டிலேயே வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் மண்ணில் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.வீரத்திற்கும், விவேகத்திற்கும் பெயர்பெற்ற இந்த சிவகங்கை மண், விசுவாசத்திற்கு பெயர்போன மண் இது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக துவங்கப்பட்டதே இந்த இயக்கம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மண்ணில் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் நோக்கம். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகரில் சின்னம் எதுவும் இல்லாமல் சுயேட்சை சின்னமான குக்கர் சின்னத்தில் நின்ற நிலையில் அதனை மக்கள் வெற்றிபெற செய்தனர். சின்னத்தை 15 நாட்களில் கொண்டு சேர்த்து பல தொகுதிகளில் லட்ச கணக்கான வாக்குகளை பெற்றது இந்த இயக்கம் தான்.
இன்றைக்கு நம்முடன் கூட்டணிக்கு தயாராக உள்ளனர். இதனை சரியாக பயன்படுத்தி அனைவரையும் வீழ்த்தி மேலே வர பாடுபடவேண்டும். மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழனிச்சாமி மீதுள்ள கோபத்தில் ஸ்டாலினை வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.இந்த தொகுதிக்கென கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்களா?
விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்வோம் என பொய் கூறியதைபோல இந்த பட்ஜெட் அனைத்துமே பொய் என மக்கள் பேசி வருகிறார்கள். மருத்துவர், ஆசிரியர், அரசு அலுவலர்கள், பெண்கள் என அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில். இந்த மூன்று ஆண்டுகளில் தாங்கள் வியர்வை சிந்தி உழைத்த காசில் ஆயிரம் ரூபாயை வழங்கி மக்களிடம் ஓட்டை வாங்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வருகிற தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொருப்பில் அமமுக இருக்கும் என்பதை கூறி அதற்காக பாடுபடவேண்டும் என கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.