அஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை மாயமான சம்பவம் தொடர்பாக அஜித்குமார் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். தொடர் விசாரணையின் போது அவர் காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதற்கிடையே, காவல்துறையினர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்தாகவும், அவரின் கண், வாய் உள்ளிட்ட இடங்களில் மிளகாய்ப்பொடி தூவி துன்புறுத்தப்பட்டதாகவும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை தமிழக அரசு சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்குமார் வீட்டிற்கு த.வெ.க., தலைவர் விஜய் நேரில் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்து ரூ.2 லட்சம் நிதி உதவியையும் வழங்கியுள்ளார். அஜித்குமார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த சந்திப்பின் போது தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.