”தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்காத மாநிலக் கல்விக்கொள்கை பயனற்றது”- அன்புமணி விமர்சனம்!
கடந்த ஆகஸ்ட் 8ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ் நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழை கட்டாய பயிற்று மொழியாக அறிவிக்காத மாநில கல்வி கொள்கையால் பயனில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாகத் தயாரிக்கப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த மாநிலக் கல்விக்கொள்கை ஒருவழியாக தூசுத் தட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு புதிய வண்ணம் பூசியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை, 11-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து, எண்மக் கல்வி, காலநிலை மாற்றக் கல்வி போன்ற சில திட்டங்களை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த எந்தத் திட்டமும் அறிவிக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு 2020-ஆம் ஆண்டில் வெளியிட்டதேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் புதிய மாநிலக் கல்விக் கொள்கை தயாரித்து வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நீதியரசர் டி.முருகேசன் தலைமையிலான குழு அதன் வரைவு அறிக்கையை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தாக்கல் செய்தது. ஆனால், ஓராண்டுக்கும் மேலாக வரைவு அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருந்தது.
மாநிலக் கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிடாதது ஏன்? என்று பாட்டாளி மக்கள் கட்சி பல முறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கல்விக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மாநிலக் கல்விக் கொள்கையில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது பள்ளிக்கல்வியில் தமிழ்க் கட்டாய பயிற்றுமொழியாக்கப்படுமா? 2006-ஆம் ஆண்டின் கட்டாயத் தமிழ் மொழிப் பாடச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுமா? என்பது தான். இந்த இரு எதிர்பார்ப்புகளுமே ஏமாற்றத்தைத் தான் கொடுத்திருக்கின்றன. மாநிலக் கல்விக் கொள்கையின் எந்தப் பக்கத்திலும் தமிழ்க் கட்டாயப் பாடம் என்ற அறிவிப்பு இடம்பெற வில்லை. நீதியரசர் டி.முருகேசன் தலைமையிலான குழு பல இடங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்றவர்கள் 12-ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கருத்துகளை சற்றும் மதிக்காமல், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக அறிவிக்க திமுக அரசு தவறி விட்டது. இது தமிழுக்கு திமுக இழைத்த துரோகமாகும்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2006-ஆம் ஆண்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சட்டம் கொண்டுவரப்பட்டு 19 ஆண்டுகள் ஆகியும் நடப்பாண்டில் கூட பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட வில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், அதை விசாரணைக்குக் கொண்டு வரவும், வழக்கில் சாதகமானத் தீர்ப்பைப் பெற்று தமிழைத் தமிழ்நாட்டின் கட்டாயப்பாடமாக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், இந்தச் சட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிற கல்வி வாரியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கும் இச்சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அப்பட்டமான பொய்யை மாநிலக் கல்விக் கொள்கை தெரிவித்திருக்கிறது. இது தமிழுக்கு திமுக அரசு செய்த இரண்டாவது துரோகமாகும். மத்திய அரசின் தேசியக் கல்விக்கொள்கையில் கூட குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் தாய்மொழிவழிக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தமிழால் ஆட்சிக்கு வந்த திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பயிற்றுமொழியாக்கப்படவில்லை. பல பத்தாண்டுகளாக அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்து வரும் திமுகவுக்கு மொழிக்கொள்கை குறித்து பேசுவதற்கு கிஞ்சிற்றும் தகுதி கிடையாது.
தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும் கூடுதலான மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தனியார் பள்ளிகளிலும் பயின்று வந்தனர். ஆனால், இப்போது மொத்தமுள்ள 37,554 அரசு பள்ளிகளில் 52.75 லட்சம் மாணவர்கள் மட்டுமே பயின்று வரும் நிலையில், அதைவிட அதிகமாக 12,970 தனியார் பள்ளிகளில் 63.42 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்றும் வகையில் புரட்சிகரமானதொரு மாநிலக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பதிலாக அரசு பள்ளிகளின் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு திருப்பி விடும் கொள்கையை தமிழக அரசு தயாரித்திருக்கிறது. அரசு பள்ளிகள் மேலும் சீரழியவே இது வழிவகுக்கும்.
தாய்மொழியை வழிக்கல்வியை ஊக்குவிக்காத, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை ஓர் குப்பைக் கொள்கைதான்” என்று தெரிவித்துள்ளார்.