For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’ - தமிழச்சி தங்கபாண்டியன்!

11:40 AM Jun 08, 2024 IST | Web Editor
‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’    தமிழச்சி தங்கபாண்டியன்
Advertisement

“திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று கூறுகிறார்கள், அப்படியில்லை. தமிழ்நாடுதான் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது” என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும்,  இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து நாளை மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலின் முக்கிய திருப்பமாக சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் அமைந்துள்ளது.  ஏனெனில், பெரும்பான்மை இல்லாத பாஜவுக்கு இந்த கட்சிகளின் ஆதரவாலேயே,  மூன்றாவது முறையாக மோடி பிரதமராக ஆட்சியமைக்கவுள்ளார்.  தமிழ்நாடு, பஞ்சாப், மணிப்பூர், மிசோரம், சிக்கிம் போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட பாஜக கைப்பற்றவில்லை.

அதுபோல அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரப் பிரதேசம்,  ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குறைவான இடங்களிலேயே பாஜக வெற்றிப் பெற்றுள்ளது.  இதனையடுத்து இதற்கான காரணத்தை அறிய பாஜக முயற்சி எடுத்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.  ஆனால் இதனால் எந்த பயனும் இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,  தென்சென்னை தொகுதியில் அக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த  தமிழிசை சௌந்ததராஜன் கூறினார்.   ஆனால்,  இதற்கு பதில் அளித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

“திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியில்லை...

1. தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது.

2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார்.

3. ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை- அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்; தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும்.

4. இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது.

5. ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம்மிக்கவர்கள்; தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது.

ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும்.  மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம்...

தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது; மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது... அதனால்தான் இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’

இவ்வாறு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement