“தமிழ்நாடு மீனவர்கள் எல்லைத் தாண்டி செல்கின்றனர்” - உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கொண்டு வந்த மீனவர்கள் பிரச்னை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவளித்து, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசினர். அப்போது தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது மக்களவையில் பேசிய டி.ஆர்.பாலு,
“இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். இலங்கை அதிபர் மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளார். ஆனால் உண்மையில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. ராமேஸ்வரம் மீனவ அமைப்பு தலைவரிடம் நேற்று பேசும் போது கூட, இலங்கை கடற்படை தொடர்ந்து மீனவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
பிரதமர் விரைவில் இலங்கை செல்ல உள்ளார். அப்போது இலங்கை அதிபர் உடன் இது குறித்த விவாதிக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வை எட்டும் வகையில் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்பி சசி தரூர்,
“புயல் போன்ற பேரிடரால் கடலோர மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு என்ன நிவாரணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதையும் விளக்க வேண்டும்” எனக் கூறினார்.
கனிமொழி எம்பி,
“இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் தேசிய உடைமையாக மாற்றப்பட்டுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்” என தெரிவித்தார்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்,
பிரதமர், நமது மீனவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் நடவடிக்கையால்தான் மீனவர்கள் வாழ்வாதாரம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் சமுதாயத்திற்கு என இன்சூரன்ஸ் கொண்டு வந்தது பிரதமர் மோடி அரசுதான்.
மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க டிரான்ஸ்பாண்டர்கள் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. புயல் போன்ற பாதிப்புகளை கண்டறிய டிரான்ஸ்மிட்டர்கள் மற்றும் லைப் ஜாக்கெட்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 வரை 95.7 லட்சம் டன் மட்டுமே மீன் உற்பத்தி இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 184.3 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது. மேலும் 84 லட்சம் டன் இறால் உற்பத்தி தற்போது இந்தியாவில் செய்யப்பட்டுள்ளது.
எல்லையை தாண்டி மீனவர்கள் சென்றுள்ளனர். அதனால் அவர்கள் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறையில் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசிடம் பேசியுள்ளனர். இந்தியா, இலங்கை இடையேயான கூட்டுகுழு இதுவரை 6 முறை சந்தித்து உள்ளது. மீனவர்களின் நலன் தொடர்பாக பல்வேறு மேம்பாடுகள் செய்யபட்டு வருகிறது” என தெரிவித்தார்.