ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு - தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்!
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் ஆர்.என். ரவியால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து திமுக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறிப்பாக ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்க வேண்டும், கால்நடை பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் திமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதையடுத்து அதை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் திருப்பனந்தாள் கடைவீதியில் திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், மேலும் ஆளுநர் ஆர்.என் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கலிட்டனர்.
அதே போல் திருவிடைமருதூர் கடைவீதியில் மயிலாடுதுறை முன்னாள் எம்பி ராமலிங்கம் தலைமையில் திருவிடைமருதூர் பேரூராட்சி துணை பெரும் தலைவர் சுந்தர ஜெயபால் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி, ஆளுநரை கண்டித்து கண்டன கோஷங்கலிட்டனர்.