கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு - சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
அதிமுக ஆட்சியில் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த உத்தரவை மாற்றியமைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதையேற்க மறுத்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவித்தது.
இந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு இன்று(மார்ச்.17) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என்.பட்டி அடங்கிய அமர்வில் விசாரணை வந்தது. அப்போது நீதிபதிகள்:- கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் படி ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட கோப்பு மீதான நிலை என்ன என்பது தொடர்பாக ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதா?
அரசு தரப்பு:- “ஒரு செய்தி அரசுக்கு ஆளுநர் தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என ஆளுநர் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். அந்த ஆவணத்தில் உள்ள சில விவரம் தமிழிலும், சில ஆங்கிலத்திலும் உள்ளது. ஆளுநர் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை”
நீதிபதிகள்:- “இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு மீண்டும் காலம் தாழ்த்துகிறதா ?
அரசு தரப்பு:- கே.டி.ராஜேந்திரபாலாஜிவிவகாரத்தில் புலன்விசாரணை முடிந்துள்ள நிலையில் வழக்கு சிபிஐ- க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆளுநர் காலம் தாழ்த்தியதற்காக எங்கள் அதிகாரிகள் கையிலிருந்து வழக்கு மாற்றப்பட்டுள்ளது, எதற்காக வேறு தரப்பின் தவறுக்காக நாங்கள் பொறுபேற்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைகள் தொடர்பான கோப்புகள் மொழிமாற்றம் தேவைப்படுவதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சில அம்சங்கள் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்றது. பிரிவு 17- ன் கீழ் Sanction நடவடிக்கை கோரப்பட்டு அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினர். அதன் பின்னர் விசாரணை அடிப்படையில் பிரிவு 19 -ன் கீழ் கோரப்பட்ட sanction நடவடிக்கை கோப்புகள் இன்னும் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது.
கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பு :- வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக புலன் விசாரணை நடைபெற்று இறுதி கட்டம் எட்டிவிட்டது, இந்நிலையில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றியுள்ளது. அப்படியெனில் மீண்டும் வழக்கு முதலில் இருந்து விசாரணை நடைபெறும், கடந்த 4 ஆண்டு நடைபெற்ற விசாரணயின் நிலை என்ன ? புலன் விசாரணை முடிவுற்ற எப்படி இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க முடியும், அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு தரப்பு :- ஆளுநரின் காலதாமத்திற்காக மாநில காவல்துறையிடம் இருந்து வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆளுநரின் தவறுக்காக நாங்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் ? விசாரணை முடிந்துள்ள நிலையில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது தேவையற்றது.
நீதிபதிகள்:- ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கோப்புகளை 2 வாரத்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வழங்க தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில், ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க கூடாது. அதேபோல 2 வாரத்தில் தமிழ்நாடு அரசு மொழி பெயர்ப்பை வழங்கியதும், உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.