For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

05:27 PM Dec 14, 2023 IST | Web Editor
எம் பி க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா    முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம்
Advertisement

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நமது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா?. 15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைக்குள் நேற்று, திடீரென இருவர் நுழைந்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதே போன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவர் தாக்குதல் நடத்தினர். இவர்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்து டெல்லி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல கட்ட சோதனைகளை கடந்து மக்களவைக்குள் புகைக் குப்பிகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை மக்களவை கூடியவுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். மக்களவையில் நடந்த சம்பவத்திற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். நாம் அனைவரும் பார்வையாளர்களுக்கான பரிந்துரை கடித்தத்தை கவனமாக வழங்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும். என்று பேசினார்.

இதனிடையே மக்களவையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்ட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையான் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  மக்களவையில் ஜோதிமணி,  ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாபன். ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய 5 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, எம்.பி.க்கள் கனிமொழி, பி.ஆர்.நடராஜன், கே.சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், பென்னி பெஹனன், வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத் ஆகிய 9 எம்.பி.க்கள், மக்களவையில் இருந்து கூட்டத்தொடர் நிறைவுபெறும் வரை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நீதி வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவிட்ட்டுள்ளார். அதில் கூறியதாவது:

”திமுக எம்பி கனிமொழி உட்பட 15 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமானது மற்றும் ஜனநாயகத்தின் உணர்வைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நமது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? நமது ஜனநாயகக் கோயிலில் ஒரு பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்? 15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர எதிர்கட்சிகளை வாயடைக்க வைக்கக் கூடாது.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement