சீருடை தைக்க அளவெடுத்தபோது மாணவிக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர், 2 டெய்லர்கள் சிறையில் அடைப்பு!
மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட எம்.கே.புரம் பகுதியில்( SRI VANI MATRICULATION) தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாணவிகளுக்கான சீருடை தைப்பதற்காக ஆண் டெய்லரை நியமித்து ஆசிரியை சாரா அளவெடுக்க வைத்துள்ளார்.
அதில் 10வது படிக்கும் மாணவி ஒருவர், ஆண் டெய்லரிடம் கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைப்பதாகவும் தன்னிடம் அந்த டெய்லர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறை புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர், டெய்லர்கள் மீது காவல் துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் டெய்லரை கைது செய்ய வேண்டும், இனி ஆண் டெய்லர்கள் மாணவிகளுக்கு சீருடை அளவீடு செய்யும் பணிக்கு பயன்படுத்த கூடாது என கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினர் அப்பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் புகாருக்குள்ளான தனியார் பள்ளி ஆசிரியை சாரா, மற்றும் டெய்லர்களான தேனி மாவட்டம் போடியை சேர்ந்த பாரதிமோகன்(60), மற்றும் கலாதேவி ( 62) ஆகிய மூவரையும் கைது செய்த மதுரை நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.