பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்!
சென்னையை அடுத்த பூந்தமல்லிக்கு அருகே சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீனத் திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.
இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,
- பூந்தமல்லிக்கு அருகில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பில் அதிநவீனத் திரைப்பட நகரம் உருவாக்கப்படும்.
- இந்தக் கனவுத் தொழிற்சாலையில் VFX, Animation மற்றும் LED Wall போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான கட்டமைப்புகள் அமைக்கப்படும்.
- மேலும், படப்பிடிப்புத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்"