"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக அரசு பள்ளியில் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாண்டையார் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகையான சேவைகள் பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சேவைகளை பெற முதல் கட்டமாக இன்று முதல் நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் வெவ்வேறு இடங்களில் 6 முகாம்கள் நடத்தப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.