”அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு தனது அப்பா பெயரை வைக்கிறார் ஸ்டாலின்”- எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் இந்த கூட்டம் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டு தற்பொழுது மூன்றாவது முறையாக நடைபெற்று வருகிறது. மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறுவதில் ஸ்டாலின் கைதேர்ந்தவர். அதிமுகவின் பல்வேறு நெருக்கடிகளுக்கு பின் தான் திமுக அரசு மகளிர் உரிமை தொகையை வழங்கியது.
அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டாலின் அவரது அப்பா பெயரை வைக்கின்றார். அதிமுக ஆட்சியில் கோவையில் மேம்பால கட்டடத்திற்கான 55 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகள் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது முதல்வர் ஆட்சி முடியும் தருவாயில் அந்த பாலத்தை திறந்து ஸ்டிக்கர் ஒட்டி கொள்ள முயல்கிறார். கோவை மேம்பாலத்திற்கு முதல்வரின் தந்தையின் பெயரை வைக்காமல் வேறு ஒருவரின் பெயரை வைத்துள்ளதை வரவேற்கிறேன்.
ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழகம் போராட்ட களமாக மாறி விட்டது. ஒரு மாநிலம் கல்வியில் சிறந்து வளர்ந்தால் தொழில் வளம் சிறந்து விளங்கும். கடன் வாங்குவதில் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். குடிநீர் மற்றும் குப்பைக்கு வரி போட்டு மக்களை வதைக்கும் அரசு தொடர வேண்டுமா? .ஆட்சி பொறுப்பேற்று 53 மாத ஆட்சி காலத்தில் ஒரு மருத்துவ கல்லூரியை கூட திமுக அரசு கொண்டு வரவில்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 7 சட்ட கல்லூரி, 68 கலை அறிவியல் கல்லூரி, 4 பொறியல் கல்லூரி கொண்டு வந்தது” என்றார்.