சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்காலிகமாக அஜித்குமார் (29) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த கோயிலுக்கு கடந்த ஜூன் 27ம் தேதி திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73) என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய காரில் வந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் அஜித்குமார் வீல்சேர் கொண்டு வந்து கொடுத்தார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவரிடம் சாவியை கொடுத்து காரை பார்க் செய்ய கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிவகாமி சாமி தரிசனம் முடிந்து காரில் புறப்பட்ட போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகை மாயமானது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சிவகாமி திருப்புவனம் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் கடந்த 28ம் தேதி கோயில் அருகே வைத்து விசாரணை செய்தனர். மேலும், அஜித்குமாரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை செய்தபோது அஜித் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் கடுமையாக தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதுடன், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறையினர் அஜித்குமாருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல், வாயில் மிளகாய் பொடியை வைத்து சித்ரவதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் பின்புறம் வைத்து போலீசார் 5 பேர் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் துடிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது.