முதல் பிரதமர் நேதாஜி என்ற நடிகை கங்கனா | “பாவம் கன்பியூஸ் ஆயிட்டாரு" என கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பிரபல நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என்று பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக கங்கனா ரனாவத் இணையவாசிகள் மத்தியில் பெரும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் களைகட்டி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதையடுத்து தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனர். மேலும் வேட்பாளர்களும் தொண்டர்களும் விதவிதமான பரப்புரையை மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்த தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரனாவத் இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்ன ஆனார் என்று குறிப்பிட்டு பேசினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அப்படி இருக்கையில், பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.
இன்னும் சிலர், ‘கங்கனா பாஜக தலைவர்களையே விஞ்சி விடுவார். அந்த அளவுக்கு அவர் புத்திசாலி’ என்று வஞ்சபுகழ்ச்சி செய்கின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை கங்கனாவின் இந்த காணொலிக்கு, ‘ஜோக்கர் கட்சியின் கோமாளிகள் இவர்கள் தான். என்ன ஒரு அவமானம்!’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவிற்கு கீழ் மற்றொரு நபர் “ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஆலியா பட், இது போல ஒன்றை கூறிய பொழுது அவருக்கு வயது 19 என்று கூறினார்கள். ஆனால் 40 வயதை தாண்டி இருக்கும் நிலையில் தன்னை தானே தேசியவாதி என்று காட்டிக் கொள்ளும் நடிகை கங்கனா ரனாவத் இந்த ஆண்டின் சிறந்த மேதை” என்று கூறியுள்ளார்.
அதே போல மற்றொரு நபர் “இவங்க இப்படித்தான். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 2014ல் சுதந்திரம் பெற்றது என்று கூறினார். தற்பொழுது இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறுகிறார். வரலாற்றை மாற்றுவது மிகவும் அபத்தமான ஒன்று” என்று கூறியுள்ளார்.