'மே 31ம் தேதி ஆஜராகிறேன்' - ஆபாச வீடியோ வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு பேச்சு!
ஆபாச வீடியோ வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணா, மே 31ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் ரேவண்ணாவின் மகனுமாவார். கடந்த மாதம் 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹாசன் மக்களவை தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.
தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளன. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.
அரசின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ராஜாங்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவரின் பாஸ்போா்ட்டை ரத்துசெய்ய கா்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.
இதையும் படியுங்கள் : பூசாரி கார்த்திக் முனியசாமி மீதான பாலியல் வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு!
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா, மே 31ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராவதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் எனக்கு எதிரான பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சட்டத்தை நான் நம்புகிறேன். சட்டத்தின் முன் நான் நிரபராதி என நிரூபிப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.