“அதிமுகவின் பலத்தை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது” - கோவையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!
கடந்த 10 நாட்களாக, எங்கே சென்றாலும் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிரூபித்து காட்டி வருவதாகவும், இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசீயா பகுதியில் அதிமுக சார்பில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
“இது அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டம் அல்ல. அதிமுக மாநாடு. தேர்தல் என்ற பெயரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம். கடந்த 10 நாட்களாக, எங்கே சென்றாலும் அதிமுக பலம் வாய்ந்த கட்சி என்பதை நாம் நிரூபித்து காட்டி கொண்டிருக்கிறோம். இதைப்பார்த்து தான் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் அவர் எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.
முதலமைச்சர் போகும் இடத்தில் எல்லாம் அவர் கண்ட கனவு, கூட்டணி பலமாக இருக்கிறது என கூறுகிறார். அவர் கண்ட கனவு பகல் கனவாக போய்விட்டது. கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறார்கள். அதிமுக மக்கள் பலத்தை நம்பி நிற்கிறது. நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கு அதிகமாக பேச தெரியும். லட்சியம் உள்ள இயக்கம் அதிமுக. திமுக போன்று கொள்ளைடியக்க கூடிய கட்சி அதிமுக கிடையாது.
எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட இயக்கம் அதிமுக. அரசியல் ஆதாயம் தேட நினைத்து பேசி கொண்டிருக்கிறார் முதலமைச்சர். கச்சத்தீவை பற்றி இன்று போட்டி போட்டுக்கொண்டு பேசி கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் தகுதி அதிமுகவுக்கு தான் இருக்கிறது. அதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக. மத்திய அரசு அதற்கு பிரமாண பத்திரம் கூட தாக்கல் செய்யவில்லை.
மூன்று ஆண்டுகளில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.656 கோடி திமுக வாங்கி இருக்கிறது. இவர்கள் தேசிய கட்சியை பற்றி பேசுகிறார்கள். ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமிருந்து ரூ.550 கோடி தேர்தல் நிதி வாங்கிய கட்சி திமுக. சூதாட்ட நிறுவனத்தில் கூட பணம் வாங்கிய கட்சி திமுக. போதைப்பொருள் தமிழ்நாட்டில் தாராளமாக கிடைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அன்றாட போராட்டம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.