சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் - அண்ணாமலை புகழாரம்!
ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பல்வேறு பகுதிகள் குறுநில மன்னர்களின் கீழ் இருந்தது. அவ்வாறு இருந்த 550க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை ஒருங்கிணைந்த பகுதியாக இணைத்த பெருமை சர்தார் வல்லபாய் படேலை சேரும்.
இந்தியாவுடன் கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இணைய வைத்தவர். எனவே இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்த நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்ளை வெளியிட்டுள்ளார். அவர் அவர் கூறியிருப்பதாவது,
"சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் இன்று. சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக, நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவராகத் திகழும் அமரர் சர்தார் வல்லபாய் படேல் புகழைப் போற்றி வணங்குகிறோம்"
இவ்வாறு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.