"2,538 பணி நியமனத்திற்கு ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளது" - அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது.
2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன. திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் நிறுவனத்தின் வங்கி மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. திமுக அரசின் கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும். நீதித்துறை மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுவே மோசடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்கப்படுவதையும், தமிழக மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதையும் உறுதி செய்ய முடியும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.