For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10,000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ.4,000 கோடி ஒதுக்கீடு! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

01:06 PM Jun 24, 2024 IST | Web Editor
‘முதல்வரின் கிராம சாலை’ திட்டத்தின் கீழ் 10 000 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் அமைக்க ரூ 4 000 கோடி ஒதுக்கீடு    முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டசபையின் 4-வது நாளான இன்று கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், சட்டமன்ற பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராமப்புறச் சாலைகள் திட்டம் குறித்து சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வளர்ச்சிகளையும் வழங்கி வருகிறோம். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி என்பதையே நமது திமுக அரசின் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதில் சாலை வளர்ச்சி என்பது மிக, மிக முக்கியமானது.

நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலை மேம்பாட்டை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு வறுமையை ஒழிப்பதில் முக்கியக் காரணியாக உள்ளன.

தமிழ்நாட்டில் சுமார் 1, 38,000 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் உள்ளன. ஊரகச் சாலைகளில் செய்யப்படும் முதலீட்டிற்கும் ஊரக மக்களின் நலனிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. சாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துச் சேவைகளின் மேம்பாடு என்பது ஊரகப் பகுதிகளில் வணிகச் செயல்திறனை அதிகப்படுத்துகிறது.

அதன்மூலம், இடுபொருள் செலவினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை அதிகரித்து, ஊரக வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. தரமான சாலைகள், கிராமப்புற மக்களின் வருமான அளவினை உயர்த்துகிறது. கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை வழங்கி, அறிவாற்றலைப் பரவலாக்கி, சமூகப், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியைத் துரிதப்படுத்த உதவுகிறது.

இதையும் படியுங்கள் : ஜாமின் கேட்டு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு – நீதிபதி மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரணை!

பேருந்து செல்லக்கூடிய சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் பல்வேறு முக்கிய சேவைகளைக் கிராமங்களுடன் இணைக்கும் சாலைகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு நமது அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி கடந்த 13-01-2023 அன்று என்னால் சட்டப்பேரவையில் ‘முதல்வரின் கிராம சாலை’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி தற்போது வரை 8,120 கிலோ மீட்டர் நீளமுள்ள ஊரகச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் கீழும் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கத் திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ,ரூ. 9,324 கோடியே 49 லட்சம் இதனை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்” மூலம் கூடுதலாக மேலும் 10,000 கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags :
Advertisement