கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குமார் - சரண்யா தம்பதி. இவர்களது மகள் சோபியா (8) அங்குள்ள தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார். அதேபோல், அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் - வேணி தம்பதியரின் மகள் கிஸ்மிதா (4) அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்று வந்தார். இந்த நிலையில் இரு சிறுமிகளும் இன்று காலை வழக்கம்போல் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு சென்றனர்.
இதனையடுத்து, இவர்களது பெற்றோர் மதிய உணவு இடைவேளைக்காக சிறுமிகளையும் அழைத்துச் செல்ல வந்தனர். அப்போது, இரு சிறுமிகளும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளையும் தேடியபோது பள்ளியின் எதிரே இருந்த கன்மாயில் இரு சிறுமிகளின் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், ஆழிமதுரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பில் பயின்றுவந்த சிறுமி சோபியா (வயது 8) த/பெ. சசிகுமார் மற்றும் அங்கன்வாடி மையத்தில் படித்துவந்த சிறுமி கிருஷ்மிகா (வயது 4) த/பெ.கண்ணன் ஆகிய இருவரும் இன்று (19.02.2025) காலை பள்ளியின் எதிர்புறம் உள்ள கண்மாய்க்குச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கண்மாயில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது பெற்றோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.