சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் இன்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது.
அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.
இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
“சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ. 63,246 கோடி செலவில் 119 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் கோடம்பாக்கம் வரையிலான உயர் வழித்தடம் வரும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை ரூ. 4,625 கோடி மதிப்பீட்டில் பெறப்பட்டு, மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பிற்காக ஒப்புதல் கோரப்படவுள்ளது.
மேலும், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலுமான இரண்டாம் கட்டத்தின் நீட்டிப்பு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.