"பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்" - ராகுல் காந்தி
"பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும்" என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் வேதாந்த் அகர்வால் (17). இவர் தனது தந்தையின் சொகுசு காரை கடிந்த 19ம் தேதி அதிகாலை 3.15 மணியளவில் மது போதையில் ஓட்டி சென்றுள்ளார். அப்போது, கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் இவர் அதிவேகமாக காரை ஓட்டி, எதிரே வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேதாந்த் அகர்வால் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் இவர் பேசியதாவது:
"பேருந்து, லாரி, ஆட்டோ, ஓலா, யூபர் ஓட்டுநர்கள் தவறுதலாக விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், பணக்கார வீட்டு குழந்தை மதுபோதையில் காரை இயக்கி இருவரை கொலை செய்ததற்கு கட்டுரை எழுதுவது தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : எலிமினேட்டர் சுற்று: ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் தனித்தனியே இரு இந்தியா உருவாக்கப்படுகிறதா? என்று மோடியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அனைத்து மக்களையும் ஏழைகளாக்க வேண்டுமா" என்று பதிலளித்தார். ஆனால், கேள்வி நீதியை பற்றியது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராகதான் நாம் போராடிக் கொண்டுள்ளோம்."
இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
https://x.com/RahulGandhi/status/1792918388617994458