அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்த கோவை மாவட்ட நாதகவினர்!
கோவை மாவட்ட நாதக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாதக பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் அபிராமி, வடக்கு மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சீமான் கொள்கையில் இருந்து முரண்படுவதாகவும், தங்கள் உழைப்புக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை எனவும், தமிழகத்தில் திமுக வலிமையான கட்டமைப்போடு உள்ளது எனவும் கூறி வெளியேறினர். மேலும் தற்போது எந்த கட்சியிலும் இணைவதாக இல்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நாதகவில் இருந்து விலகிய கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பல்வேறு நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.