ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் - வாக்குறுதிகளை அறிவித்த பாஜக!
03:45 PM Nov 16, 2023 IST | Web Editor
Advertisement
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (நவம்.16) வெளியிட்டார்.
Advertisement
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இந்நிலையில் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ராஜஸ்தான் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
- அந்தத் தேர்தல் அறிக்கையில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை அதிகரித்து ஆண்டுக்கு ரூ.12,000 வழங்குதல்,
- பொருளாதார அடிப்படையில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப்புத்தகம், பை உள்ளிட்டவை வாங்குவதற்காக ஆண்டுக்கு ரூ.1,200 வழங்கப்படும்.
- ரூ.40,000 கோடியில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சி.பி.ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால், வசுந்தரா ராஜே சிந்தியா, கஜேந்திரசிங் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஜெ.பி.நட்டா பேசியதாவது:
மற்ற கட்சிகளைப் பொருத்தவரை தேர்தல் அறிக்கை என்பது ஒரு வழக்கமான சடங்கு. ஆனால், பாஜகவை பொருத்தளவில் இது வளர்ச்சிக்கான பாதையாகும். இவை வெறும் தாளில் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல. இவற்றை நிறைவேற்றுவதற்கு நாங்கள் கடுமையாகப் பாடுபடுவோம். நாம் சொன்னவற்றை எல்லாம் நிறைவேற்றியுள்ளோம் என்பதற்கு நமது வரலாறே ஆதாரமாக உள்ளது.” என்று கூறினார்.
ராஜஸ்தானில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளிலும், பாஜக 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்-3ம் தேதி நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.