புதுச்சேரி சிறுமிக்கு நீதி கேட்டு கடைகள் முழுவதும் அடைப்பு..!
புதுச்சேரியில் சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த இரண்டாம் தேதி மாயமானார். சிறுமியை இரண்டு நாட்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த சாக்கடைக் கால்வாயில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. சாக்கடையில் கிடந்த மூட்டையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதான விவேகானந்தன், 19 வயது இளைஞர் கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த உடற்கூராய்வில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் புதுச்சேரி முழுவதும் தீயாகப் பரவி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே திரண்ட மக்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கஞ்சா போதையே இக்கொடூர சம்பவத்திற்கு காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். புதுச்சேரி நீதிமன்றம் முன் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது என்று முடிவு செய்திருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடந்து, சிறுமியின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை 10 மணிக்கு இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் சட்டமன்றத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்களுடன் குழந்தையின் தந்தை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் தந்தையிடம் உறுதி அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்தன. இதே போன்று, புதுச்சேரி, காரைக்காலில் அதிமுக சார்பிலும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் அன்பழகன் அறிவித்தார். அதன்படி இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.