தஞ்சாவூரை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது - செல்வப்பெருந்தகை கண்டனம்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தஞ்சாவூர் மாவட்டம், கள்ளிவயல் தோட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்; கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும், மீண்டும் கைது செய்து அவர்களின் வாழ்வாதார உரிமையை பறித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்திருப்பது எந்தவகையிலும் ஏற்றக் கொள்ள முடியாத செயலாகும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் எந்த முடிவும் எட்டவில்லை. தொடர் கைது நடவடிக்கையினால் தமிழ்நாட்டின் மீன்பிடி கிராமங்களில் பதட்டம் அதிகரித்துள்ளது. அவர்களின் மீன்பிடி உரிமை கேள்விக் குறியாகியுள்ளது.
மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நிகழ்ந்திருக்காது. மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இருக்கிற வரலாற்று ரீதியிலான உறவின் அடிப்படையிலும், இரு அண்டை நாடுகளிடையே நிலவ வேண்டிய நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டும் இப்பிரச்சினையை அணுக வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண உடனடியாக இந்தியா - இலங்கை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தை கூட்டவேண்டும். இலங்கை அரசு பிடித்துள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால். பாஜக ஆட்சிக்கு எதிராக மீனவர்களைத் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.