திருப்பரங்குன்றம் விவகாரம் : தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் CISF வீரர்களின் பாதுகாப்போடு மனுதாரர் 10 பேரை அழைத்துக்கொண்டு மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலே CISF பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறை தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF வீரர்கள் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால்தான் தனி நீதிபதி மீண்டும் உத்தரவிட்டுள்ளார் எனக் கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் திருப்பரங்குன்றம் மலையில் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்சனையாக உள்ளது. கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு சார்பில் விதிக்கப்படவில்லை. 2014ம் ஆண்டு தீர்ப்பு குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதை உறுதியாக சொல்லி உள்ளது. அதைத்தான் பின்பற்றி இருக்கிறோம். புதிதாக தீபம் ஏற்ற சொல்லும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 15 மீட்டர் தான் இருக்கிறது என்பதால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் காரணமாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.