மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்!
மத்திய அரசை கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று முன்தினம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. உதாரணமாக, உத்தர பிரதேசத்துக்கு சுமார் ரூ.2.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவுக்கு ரூ.44,485 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து பிப். 07-ம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் எனது தலைமையில் ‘டெல்லி சலோ' போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் கர்நாடகாவை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பாஜக, மஜத தலைவர்களும், அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
அதன்படி 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு கர்நாடகத்துக்கு மத்திய அரசு இழைத்துள்ள அநீதியைக் கண்டித்தும் டெல்லி ஜந்தர்மந்தரில் கர்நாடக அரசு இன்று (பிப். 07) போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சிகளை கடந்து கர்நாடக நலனுக்கான போராட்டத்தில் பங்கேற்க கர்நாடகத்தை சேர்ந்த பாஜகவின் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார். கர்நாடக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் போராட்டத்துக்கு அழைத்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, மத்திய நிதியை மாநில காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.