பொதுமேடையில் ராகுல் காந்தியை சாடிய பிரதமர் நரேந்திர மோடி!
“காங்கிரஸ் குடும்பத்தின் 'யுவராஜ்' (ராகுல்காந்தி) உத்திரப்பிரதேச இளைஞர்கள் அடிமைகள் என்று கூறுகிறார். தன்னிலையில் இல்லாதவர்கள் உ.பி.யின் இளைஞர்களை அடிமைகள் என்கிறார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது,
“உத்தரப்பிரதேசம் மாநிலம் தற்போது முன்னேறி வருகிறது. காங்கிரஸ் குடும்பத்தின் 'யுவராஜ்' உத்திரப்பிரதேச இளைஞர்களை போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறுகிறார். தன்னிலையில் இல்லாதவர்கள் உ.பி.யின் இளைஞர்களை அடிமைகள் என்கிறார்கள். இது என்ன மொழி, இந்தியா கூட்டணி இளைஞர்களை அவமதித்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தை அவர்கள் விரும்பாததற்கு இப்போது இன்னொரு காரணமும் கிடைத்துவிட்டது. காசி மற்றும் அயோத்தியின் புதிய முகம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ராமர் மீது காங்கிரசுக்கு இவ்வளவு வெறுப்பு இருப்பதாக எனக்குத் தெரியாது. அவர்களது குடும்பம் மற்றும் வாக்கு வங்கியைத் தாண்டி அவர்களால் பார்க்கவோ சிந்திக்கவோ முடியாது.
இந்த தேர்தலில் அவர்கள் (காங்கிரஸ்) தங்கள் வைப்புத்தொகையைக் கூட காப்பாற்ற போராட வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உ.பி.யில் அனைத்து இடங்களையும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வழங்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடியின் மூன்றாவது பதவிக்காலம் இந்தியா ஒரு புதிய வானத்தைக் காண வழிவகை செய்யும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். பத்தாண்டுகளாக மோடியை அவதூறாக பேசி கழித்தனர். ஆனால், இப்போது மக்கள் மீது தங்களின் விரக்தியை பேசுகிறார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.
ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தனது முன்னாள் தொகுதி அமேதியில் உரையாற்றிய போது, அவர் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசினார். “நாட்டின் இளைஞர்களுக்கு வேலை இல்லை. வாரணாசியில் இளைஞர்கள் குடிபோதையில் சாலையில் கிடப்பதை நான் பார்த்தேன். உ.பி.யின் எதிர்காலம் என்பது இரவில் குடித்துவிட்டு சாலையில் நடனமாடுவது, மறுபுறம், ராமர் கோயில் உள்ளது, நீங்கள் அங்கு அம்பானி, அதானியைப் பார்ப்பீர்கள். ஆனால் பிற்படுத்தப்பட்டவர் தலித்களை பார்க்க முடியாது. அது உங்கள் இடம் அல்ல. பணத்தை எண்ணுவதே அவர்களின் வேலை” என கூறியிருந்தார்.