குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்!
நாட்டின் 14வது குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் கடந்த ஜூலை 21ம் தேதி மருத்துவ காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே, நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஆகஸ்ட் 7ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற முடிந்தது. மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் என 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்த நிலையில் இன்று மாலை 5 மணி வரை 767 உறுப்பினர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
சுமார் 98.3 சதவீத வாக்குகள் இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவாகியிருந்த நிலையில் அதனை என்னும் பணி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதனிடைய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை விவரங்களை மாநிலங்களவை செயலாளர் (தேர்தல் அதிகாரி) அறிவித்தார். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இதன் படி நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்வாகும் 3வது தமிழர் சி.பி ராதாகிருஷ்ணன் ஆவார். கடந்த 1952 முதல் 1957 வரை சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ,1984 முதல் 1987 வரை ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் தமிழ்நாட்டிலிருந்து குடியரசு துணைத் தலைவர் பதவியை அலங்கரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.