பிரதமர் மோடி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நாட்டை நாசம் செய்துவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் நல்லதல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
”நடைபெற இருக்கும் தேர்தல் மிகமிக முக்கியமான தேர்தல். பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கான தேர்தலாக மட்டும் யாரும் இதை நினைத்துவிடக் கூடாது. இந்தியாவில் இனி ஜனநாயகம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்வதற்கான தேர்தல் இது. இந்தியாவின் மாநிலங்களை - மக்களாட்சியை, மதச்சார்பின்மையை, பன்முகத்தன்மையை, ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை-எளிய மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பாஜக இன்னொரு முறை ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ற கூட்டாட்சி அமைப்பே இருக்காது.
நாட்டில் ஜனநாயக அமைப்பு முறையே இருக்காது. நாடாளுமன்ற நடைமுறையே இருக்காது. இவ்வளவு ஏன், மாநிலங்களே இருக்காது. முதலில் நாம் எல்லாரும் இதை உணர வேண்டும். கண்ணுக்கு முன்னால் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டதைப் பார்த்தோம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். அங்கு இருக்கின்ற மக்களின் விருப்பத்திற்கு மாறாக யூனியன் பிரதேசமாக மாற்றினார்கள். அரசியல் கட்சித் தலைவர்களையே, வீட்டுச் சிறையில் அடைத்தார்கள். முன்னாள் முதலமைச்சர்களும் இதற்குத் தப்பவில்லை. அங்கு சட்டமன்றம் கிடையாது. காஷ்மீருக்கு ஐந்து ஆண்டுகளாக தேர்தல் கிடையாது. இப்போது கூட, ஜம்மு-காஷ்மீருக்குத் தேர்தல் அறிவிக்கவில்லை. இதுதான் பாஜக பாணி, சர்வாதிகாரம்!
இந்த நிலைமை நாளை தமிழ்நாட்டிற்கும் ஏற்படலாம். ஏன், பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இதே நிலைதான் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்படும். இது ஏதோ எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. பாஜக ஆளும் மாநிலங்களுக்கே இந்த ஆபத்து வரத்தான் செய்யும். 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக இந்தியாவை எல்லா வகையிலும், மிகமோசமான வகையில் பாழ்படுத்திவிட்டது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்த எல்லாக் கட்டமைப்புகளையும் சிதைத்துவிட்டார்கள்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களைப் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத அளவுக்கு கைது செய்து கொண்டிருப்பது ஒன்றிய ஆளுங்கட்சியின் உள்நோக்கத்துடன் கூடிய நடவடிக்கை. பல்வேறு வழக்குகளில் இருந்து விடுபட பாஜகவுக்கு கட்சி மாறியவர்கள் மேல் சட்டம் தன் கடமையைச் செய்ய மறுப்பதற்குக் காரணம் என்ன?
தன் கையில் கிடைத்த அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தவறாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்வது மட்டுமல்ல, நாட்டையே நாசம் செய்துவிட்டார். இனியும் மோடி ஆட்சி தொடர்வது, தமிழ்நாட்டுக்கு அழிவு! இந்தியாவுக்கும் நல்லதல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக ஆட்சி மக்கள் பணிகளை எல்லாம் எந்த தொய்வில்லாமல் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
எத்தனையோ நல்ல திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். அதெல்லாம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான திட்டங்கள். இதில், தேர்தல் அறிக்கையில் சொல்லிய வாக்குறுதிகளை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறோம். இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வந்தால், இன்னும் என்னென்ன திட்டங்களைச் செய்வோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுச் சொல்லி இருக்கிறோம்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசுக்குக் குடைச்சல் கொடுக்கும் ஆளுநரைக் கண்டித்து ஒருநாளாவது ஒரு அறிக்கையாவது விட்டிருக்கிறாரா? அதிமுக ஆட்சியில், ஆளுநர் ஆய்வுக்குச் செல்கிறேன் என்று புறப்பட்டபோது, அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது திமுக. ஆளுநருக்கு எதிராக இப்போதும் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடுகிறது திமுக.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி, அதற்குப் பிறகு எய்ம்ஸ் அமைக்காமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள் என்று ஒரு முறையாவது ஒன்றிய அரசின் கதவைத் தட்டியிருப்பீர்களா? இவ்வளவு ஆண்டுகளாக இது எதையுமே செய்யாமல் இப்போது வந்து நீங்கள் போடும் இந்த பகல் வேஷம் பாஜகவுக்கான பசப்பு நாடகம்தான் என்று மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
கருப்புப் பணத்தை மீட்பேன், மீட்டு வந்து 15 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களுக்குத் தருவேன் என்றார் பிரதமர் மோடி. 15லட்சம் வேண்டாம், 15 ரூபாயாவது தந்தாரா? இல்லை! இதைக் கேட்டால், உள்துறை அமைச்சர் பேட்டியில் சொல்கிறார். அது, தேர்தலுக்காக கூறினோம் என்று சொல்லி முடித்துவிட்டார். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று கூறினார்கள். வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா?
ஒன்றிய பாஜக அரசு உழவர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. ஆனால், அது எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. அதனால் மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டார்கள். டெல்லிக்குள் அவர்கள் நுழைந்துவிடுவார்களோ என்று பயந்து இரும்பு முள்வேலி, சாலைகளில் ஆணிப் படுக்கை அமைத்திருக்கிறது பாஜக அரசு. இதுவரை நான்கு உழவர்கள் இறந்துவிட்டார்கள்.
இந்திய நாட்டுக்குள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளைவிடச் சொந்த நாட்டு விவசாயிகள்தான் பிரதமர் மோடியின் கண்ணுக்கு எதிரிகளாகத் தெரிகிறார்கள். ஏழைத் தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஆட்சியில் விவசாயிகள் நிலைமை இதுதான். தமிழ்நாட்டில், காவிரி பிரச்னையில் பாஜகவும், அதிமுகவும் செய்த துரோகங்களை டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த உங்களால் மறந்திருக்க முடியாது.
உடனடியாகக் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுக தான். பாஜக-அதிமுகவின் துரோகத்தையும் உணர்ந்து, இவர்களை டெல்டா மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், இப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் வாயிலேயே வடை சுடுகிறார்.
தமிழ்நாட்டில் பல பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து, கடந்த டிசம்பர் மாதம் பெரும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. பல மாதம் ஆனது. இதுவரை நிவாரண நிதியாக ஒரு சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை பாஜக அரசு. தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு பாஜகவிற்கு மனமில்லை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை அறிவித்திருந்தால் பாராட்டலாம். தமிழ்நாட்டுக்கு எதையும் தராத மோடிக்கு தமிழ்நாட்டு மக்களும் தங்களின் வாக்கையும் தர மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்கள் எதையும் வழங்காத மோடிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. இது மோடிக்கும் தெரியும்.
இவ்வளவு நாட்களாக எங்களை உசுப்பிவிட்டு – உற்சாகப்படுத்தி வந்தார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், அரசியலமைப்பையும் அவமதித்தால், அதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம் என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால், இந்த அளவுக்கு கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
மாநிலத்தைக் கெடுத்த அதிமுக - மாநிலத்தைக் கண்டுகொள்ளாத பாஜக, இந்த இரண்டு பேரையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். கடந்த இரண்டு தேர்தலில் நிரூபித்த மாதிரியே, இந்தத் தேர்தலிலும் காட்ட வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.