கரூர் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி "தமிழில்" பாராட்டுக் கடிதம்!
பிரதமர் மோடி “தேர்வுக்குத் தயாராகுங்கள்” என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கரூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக தமிழில் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் பயமில்லாமல் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள ஊக்கப்படுத்தும் வகையில் "தேர்வுக்குத் தயாராகுங்கள்" என்ற பரீக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் நிகழ்ச்சியை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அந்த வகையில், 6-வது ஆண்டு நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரூர் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக தமிழில் பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கவும், வளரும் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஊட்டவும், பிரதமர் நரேந்திரமோடி, ‘தேர்வுக்குத் தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதும், நாடு முழுவதும் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை பிரதமருடன் பகிர்ந்து கொள்வதும் வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கவும், வளரும் இளைய தலைமுறைக்கு நம்பிக்கை ஊட்டவும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், ‘தேர்வுக்குத் தயாராகுங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றுவதும், நாடு முழுவதும்… pic.twitter.com/T3z0hc7q38
— K.Annamalai (@annamalai_k) November 24, 2023
கரூர் வெண்ணமலை பரணி வித்யாலயா மற்றும் பரணி பார்க் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும், பிரதமருடன் பொதுத் தேர்வு குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ததை அடுத்து, பிரதமர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தமிழில் 1,002 கடிதங்கள் அனுப்பிப் பாராட்டியுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் அனைவருக்கும் இது மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்களை ஊக்குவிக்கும் இந்தக் கனிவு மிகுந்த செயலுக்காக, பிரதமருக்கு, தமிழ்நாடு பாஜக சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் பாராட்டுக் கடிதம் கிடைக்கப்பெற்ற, பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.