உக்ரைன் மீது ரஷியா தாக்குல் - 16 பேர் உயிரிழப்பு.... உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம்!
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ரஷியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "ரஷ்யா அமைதியை விரும்பவில்லை என்பதற்கான தெளிவான மற்றும் கசப்பான சான்றாக இந்த தாக்குதல் அமைந்துள்ளது. ரஷ்யாவின் ஒவ்வொரு நாளும் தொடரும் தாக்குதல்கள் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த வன்முறை நீடிப்பதற்கு ஒரே காரணம் ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பாததுதான். இது உலகத்துக்கே தெரியும்.
ரஷ்யாவின் மீது சர்வதேச சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலமும், உக்ரைனின் விமான பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், நமது இராணுவத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் மூலமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.