"பிரதமர் மோடி நமது நாட்டையும் , ஜனநாயகத்தையும் சிதைக்கிறார்" - ஜெய்ப்பூரில் சோனியா காந்தி பேச்சு!
பிரதமர் மோடி நமது நாட்டையும் நாட்டின் உயரிய கொள்கையான ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
“காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றது. இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சச்சின் பைலட், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி தெரிவித்ததாவது..
“நமது நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கான சதி வேலைகள் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், சமத்துவமின்மை, அடக்குமுறைகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசாங்கம்தான் மத்தியில் ஆட்சி செய்கிறது.
பிரதமர் மோடி நமது நாட்டையும் நாட்டின் உயரிய கொள்கையான ஜனநாயகத்தையும் சிதைத்து வருகிறார். மக்களவைத் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சி தலைவர்களை பாஜகவில் இணையச் சொல்லி தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று” என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.