சென்னையில் ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீசார்... அதிகாலையில் பரபரப்பு!
கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிக்க சிலர் முயற்சித்தனர். இந்த வழக்கில் போலீசார் 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா என்ற ரவுடி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் மகாராஜாவை கைது செய்யும் முயற்சியில் தீவிரம் காட்டினர்.
மகாராஜா திருநெல்வேலியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருநெல்வேலி விரைந்த தனிப்படை போலீசார் மகாராஜாவை கைது செய்தனர். இதனைடுத்து, போலீசார் மகாராஜாவை இன்று (மார்ச் 21) அதிகாலை சென்னை அழைத்து வந்தனர். இந்த வழக்கில் இருசக்கர வாகனம் ஒன்றை பயன்படுத்தியதாக மகாராஜா போலீசாரிடன் தெரிவித்தார். அதனை பறிமுதல் செய்ய சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதிக்கு இன்று அதிகாலை போலீசார் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, மகாராஜா தனது வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் மகாராஜாவின் காலில் சுட்டார். இதில் காயமடைந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார். பின்னர் மகாராஜாவை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஜா மீது கொள்ளை, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.