ஆந்திரா கூட்ட நெரிசல் - பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் வருகை தருவது வழக்கம். குறிப்பாக பண்டிகை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அந்த வகையில், ஏகாதசியை முன்னிட்டு இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமான திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். மீட்புக் குழுவினர் சம்பவ இத்திற்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார் கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோயில் கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும்”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.