பாமக சிறை நிரப்பும் போராட்டம் : வன்னியர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றும் அளவுக்கு அமைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! கற்களும், முட்களும் நிறைந்த சமூகநீதியை நோக்கிய இன்னொரு போராட்டப் பாதையில் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு குறைந்தது 15% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் திசம்பர் 17-ஆம் தேதி புதன்கிழமை தமிழகம் முழுவதும் நாம் நடத்தவிருக்கும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டத்தைப் பற்றி தான் நான் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர் என்பதை நான் அறிவேன்.
நமது போராட்டத்திற்கு சரியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதை நினைவூட்டுவதற்காகவும், சமூகநீதிப் போராட்டத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் ஏற்பாடுகளை விரைவுபடுத்தவும், விரிவுபடுத்தவும் தான் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்.
கடந்த ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் வாங்கிய வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீடு செல்லாது என்று, சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனால் நாம் அடைந்த மனக்காயங்களுக்கு மருந்து போட்டது உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு தான். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியும், மருத்துவர் ராமதாஸ் அவர்களும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை; உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022-ஆம் நாள் தீர்ப்பளித்தது. அன்றே சமூகநீதிக்கான போராட்டங்களை நாம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்கள் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நாம் நம்பினோம்.
எனது தலைமையில் பாமக முக்கிய நிர்வாகிகள் அடங்கிய குழு மே 8-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினோம். அப்போது நமது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை 2022-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பே கண்டிப்பாக நிறைவேற்றித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தார். அதையும் நாம் நம்பினோம்.
கடைசியாக 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இதே கோரிக்கையை வலியுறுத்திய போது தான். ஆட்சியாளர்கள் அவர்களின் உண்மை முகத்தைக் காட்டினார்கள். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறி நம்பிக்கை துரோகம் செய்தனர்.
திமுக அரசின் இந்த சமூகநீதி நம்பிக்கைத் துரோகங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்; தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் திசம்பர் 17-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்புவதற்காக நாம் நடத்தவிருக்கும் போராட்டம் பத்தோடு பதினொன்றாக இருக்கக் கூடாது. நமது வலிகளையும், வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைய வேண்டும். பாட்டாளிகளை அடைக்க தமிழ்நாட்டின் சிறைகள் போதாது என்று அஞ்சும் அளவுக்கும், வன்னியர்களுக்கான சமூகநீதியை இனியும் தாமதிக்கக் கூடாது என்று நினைத்து உடனடியாக வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கும் திசம்பர் 17-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைய வேண்டும். அதற்கேற்ற வகையில் போராட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போராட்டக் களத்தில் உங்களுடன் கைக்கோர்த்து போராடுவதற்கான நாளை எண்ணி, எண்ணி காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.